ஷா ஆலாம், அக்டோபர்.02-
காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நிவாரணப் பொருட்களுடன் தன்னார்வலர்களை ஏற்றிச் சென்ற Global Sumud Flotilla கப்பலை அனைத்துலக கடற்பகுதியில் இடைமறித்து சிறைப்பிடித்து இருக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை கடற்கொள்ளையைத் தவிர வேறொன்றும் இல்லை என்று கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ வர்ணித்துள்ளார்.
Global Sumud Flotilla கப்பலை தடுத்து நிறுத்துவதற்கும், சிறைப்பிடிப்பதற்கும் இஸ்ரேலுக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை என்று சார்ல்ஸ் குறிப்பிட்டார். அனைத்துலக கடற்பகுதியில் பொதுமக்களைத் தடுத்து வைக்க இஸ்ரேலுக்கு எந்த சட்டப்பூர்வமான காரணமும் இல்லை. அதே வேளையில் அனைத்துலக சட்டத்தை இஸ்ரேல் முழுமையாக புறக்கணிக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ஒரு மனிதாபிமானப் பணியை ஆணவத்துடன் அடக்க இஸ்ரேல் முற்படுகிறது என்று சார்ல்ஸ் குறிப்பிட்டார்.
காசாவின் பட்டினியால் வாடும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகளை இடை மறித்து பறிமுதல் செய்வது பாதுகாப்பான செயல் அல்ல, அது கூட்டுத் தண்டனைக்குரியது மற்றும் போர்க்குற்றமாகும் என்று Charles சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவது ஒரு குற்றமா? என்று கேள்வி எழுப்பிய Charles, மலேசியர்கள் உட்பட அனைத்து ஆர்வலர்களையும் சட்டவிரோதமாக தடுத்து வைத்திருக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை தாங்கள் கடுமையாக கண்டிப்பதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








