கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் ஒதுக்கீட்டுக்கும் உண்மையான செலவினத்துக்கும் இடையே ஏற்பட்ட ரிங்கிட் 2.1 பில்லியன் வித்தியாசம் தொடர்பில் கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஸெமின் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மிடம் புகார் அளித்தார்.
எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹாலிம் அமான், முறையான புகார் அளிக்கப்பட்டால் இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என்று கடந்த 1ஆம் தேதி தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து தாம் புகார் அளித்துள்ளதாக சோங் கூறினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ரிங்கிட் 1.1 பில்லியன் ஒதுக்கீட்டுக்கு எதிராக ரிங்கிட் 1.8 பில்லியனும், 2024ஆம் ஆண்டு ரிங்கிட் 1.3 பில்லியனுக்கு எதிராக ரிங்கிட் 2 பில்லியனும், 2025ஆம் ஆண்டு ரிங்கிட் 1.6 பில்லியனுக்கு எதிராக ரிங்கிட் 2.3 பில்லியனும் செலவிடப்பட்டதாக கருவூலம் தெரிவித்துள்ளது.
இதில் ஊழல், அதிகார அத்துமீறல், நலன் முரண்பாடு அல்லது கொள்முதல் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதை எஸ்பிஆர்எம் சுயேச்சையாக விசாரிக்க வேண்டும் என்றும் சோங் வலியுறுத்தினார்.








