கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-
சபாவைத் தளமாகக் கொண்ட முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அந்த மாணவி கொலை செய்யப்பட்டு விட்டதாக டிக் டாக் காணொளியில் தவறான அறிக்கையை வெளியிட்டது தொடர்பில் 51 வயது நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இரண்டு நிமிடங்களுக்கும் மேலான அந்த வீடியோவில் ஸாரா கைரினாவின் பிரேத பரிசோதனையின் முடிவுகள் தொடர்பான உரையாடலும் இடம் பெற்றுள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
முதற்கட்ட சவப் பரிசோதனையில் ஸாரா கைரினாவின் மரணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டக் கொலை என்பது போல் அந்த வீடியோவில் தவறான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.








