பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவையை அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். 28 அமைச்சர்களாக இருந்த தமது அமைச்சரவையை 31 அமைச்சர்களாக அதிகரித்துள்ளார். அமைச்சரவை மாற்றத்தை இன்று காலை 11.00 மணியளவில் பிரதமர் அறிவித்தார்.
அமைச்சரவை சீரமைப்பு சற்று பெரியது என்ற போதிலும் இதற்கு முன்பு இருந்த அரசாங்கத்துடன் ஒப்பிகையில் தமது அமைச்சரவை சிறியது என்று பிரதமர் வர்ணித்துள்ளார்.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் மனித வள அமைச்சராக கடந்த ஓராண்டு காலமாக பொறுப்பு வகித்து வந்த டிஏபி யை சேர்ந்த பத்து காஜா எம்.பி., வி. சிவகுமார் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். டிஏபி யின் உதவித் தலைவரும், ஈப்போ பாராட் எம்.பி.யுமான எம். குலசேகரன், பிரதமர் துறையில் சட்ட சீரமைப்புக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் துன் மகாதீர் முகமட் தலைமையிலான அமைச்சரவையில் மனித வள அமைச்சராக பொறுப்பேற்று இருந்த குலசேகரன், தற்போது துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஏபி யின் சிலாங்கூர் மாநிலத் தலைவரான கோபிந்த் சிங் டியோ, இலக்கவியல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் கோபிந்த் சிங், தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
சுங்கை பூலோ எம்.பி.யும், மித்ரா சிறப்புப்பணிக்குழுவின் தலைவருமான டத்தோ ஆர். ரமணன், தொழில்முனைவர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்முனைவர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சராக பொறுப்பு வகித்த செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, ஒற்றுமைத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் அமைச்சு மாற்றப்பட்டுள்ளது.
பிரதமர் துறையின் சட்டசீரமைப்பு துணை அமைச்சராக பொறுப்பு வகித்த புக்கிட் குளுகோர் எம்.பி. ராம் கர்ப்பால் நீக்கப்பட்டுள்ளார்.
டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் புதல்வியும், துணை கல்வி அமைச்சருமான லிம் ஹுய் யிங் துணை நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புத்துறை மற்றும் இலக்கவியல் துணை அமைச்சராக பொறுப்பு வகித்த கூலாய் எம்.பிட் தியோ நீ சிங் தொர்புத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈபிஃப் வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்ஸா அசிசான் செனட்டராக நியமிக்கப்பட்டு, இரண்டாவது நிதி அமைச்சராக பொறுப்பேற்கவிருக்கிறார்.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக பொறுப்பு வகித்த கோலசிலாங்கூர் எம்.பி. டத்தோ ஶ்ரீ டாக்டர் டிசுல்கிஃப்லி அஹ்மாட்மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சராக பொறுப்பு வகித்த டாக்டர் சலிஹா முஸ்டஃபா பிரதமர் துறையின் கீழ் கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் பிரதமர் அன்வாரின் இந்த அமைச்சரவை சீரமைப்பில் ஒரு முழு அமைச்சர் மற்றும் இரண்டு துணை அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.








