கூச்சிங், டிசம்பர்.16-
சரவாக் மாநில அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனமான ஏர்போர்னியோ, தனது பயண டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து எழுந்த விமர்சனங்களை மறுத்துள்ளது.
அண்மையில், ஏர்போர்னியோவின் டிக்கெட் முன்பதிவுக்கான வலைத்தளம் தொடங்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் பலர், டிக்கெட்டுகளின் விலை மிகவும் கூடுதலாக உள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள ஏர்போர்னியோ நிறுவனம், இதற்கு முன்பு MASwings நிறுவனம் வசூலித்த கட்டணங்களின் அளவிலேயே தாங்களும் வசூலிப்பதாகத் தெரிவித்துள்ளது.
விமானங்களின் செயல்பாட்டு நிலைத்தன்மையை உறுதிச் செய்யும் கட்டண அமைப்புகளின் அடிப்படையில், நியாயமான முறையிலேயே கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் ஏர்போர்னியோ குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் MASwings நிறுவனத்தை AirBorneo Holdings Sdn Bhd கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல், விமானச் சேவையை துவங்கவுள்ளது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி முன்பதிவுக்கான வலைத்தளம் திறக்கப்பட்ட நிலையில், ஜனவரி 14-ஆம் தேதி முதல் பயணங்களுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன.








