கோலாலம்பூர், செப்டம்பர்.26-
2026 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் உலகளாவிய காலமுறை மதிப்பாய்வு மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் ஐ.நா. உறுப்பு நாடுகள், சிங்கப்பூரில் நடைமுறையில் இருந்து வரும் மரணத் தண்டனை முறை, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்று நான்கு மனித உரிமை குழுக்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காக ஒரு மலேசியப் பிரஜையான 39 வயது கே. தட்சணாமூர்த்திக்கு நேற்று மரணத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனித உரிமைக் குழுக்கள் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளன.
சிங்கப்பூரைத் தளமாக கொண்ட திங்க் செண்டர் மற்றும் தாய்லாந்தின் ஃபோரும் ஆசியா ஆகியவற்றுடன் இணைந்து மலேசியாவில் சுவாராம் மற்றும் பூசாட் கோமாஸ் ஆகியவை இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன.
சிங்கப்பூரில் மரணத் தண்டனை முறை மறுபரிசீலனை செய்யப்பட்டு ரத்து செய்யப்பட வேண்டும். ஏற்கனவே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளில் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட வேண்டும் என்று அந்த மனித உரிமைக் குழுக்கள் தங்கள் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளன.








