Jul 13, 2026
Thisaigal NewsYouTube
 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை மேம்படுத்த எஸ்பிஆர்எம் 6 பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது
தற்போதைய செய்திகள்

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை மேம்படுத்த எஸ்பிஆர்எம் 6 பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது

Share:

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம், நிதி மேலாண்மை மற்றும் பராமரிப்பு நிதியுதவி விநியோகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சுக்கு 6 முக்கிய பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது.

அமைச்சின் நிதியுதவியைப் பெற்றும், பராமரிப்புப் பணிகளைச் செய்யத் தவறிய சில வழிபாட்டுத் தலங்கள் மீதான விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும் சங்கங்களின் பதிவுத் துறையான ஆர்ஓஎஸ் அல்லது சட்டப்பூர்வ அமைப்பின் கீழ் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

மேலும், திட்டங்களுக்கான கால நீட்டிப்பைத் தவிர்த்தல், பயன்படுத்தப்படாத நிதியைத் திருப்பிச் செலுத்துவதற்கான நடைமுறையைக் கொண்டு வருதல் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் நேரடித் தள ஆய்வுகளைப் புகைப்படங்களுடன் சமர்ப்பித்தல் போன்ற பரிந்துரைகளும் இதில் அடங்கும் என்று எஸ்பிஆர்எம் குறிப்பிட்டுள்ளது.

இறுதிப் பரிந்துரையாக, விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த, 2009-ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் 18-வது பிரிவின் கீழ் கடுமையான விதி சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்பரிந்துரைகளை ஆய்வு செய்து அமல்படுத்துவதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News