பினாங்கு மாநில ஆளுநர், துன் டத்தோ ஸ்ரீ உத்தமா ஹாஜி ரம்லி இங்ஹா தாலிப் பிறந்த நாளை , உலகளாவிய சுகாதாரத் துறையில் ஈடில்லா மனிதாபிமானச் சேவை ஆற்றி வரும் வைகோன் ஏசியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தனபதி குமரையாவுக்கு, டீ.எஸ்.பி.என். எனும் அந்தஸ்தை தாங்கிய ‘டத்தோ’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தியதற்காக இந்த உன்னத அங்கீகாரம் டத்தோ தனபதி குமரையாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கெடா, கோலக்கெட்டிலைப் பூர்வீகமாகக் கொண்டு, வளர்ந்த இவர், லண்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி முடித்தவர் ஆவார். அரசியல் மற்றும் மருத்துவத் துறை நிபுணர்களால் பெரிதும் மதிக்கப்படும் டத்தோ தனபதி குமரையா, நரம்பியல் மருத்துவ உளவியலாளர் பேராசிரியர் டாக்டர் நிவாஷினி மோகன் அவர்களை மணந்து, மிஷா, தானிகா என்ற இரு புதல்விகளைக் கொண்டுள்ளார்.
தமக்கு கிடைத்துள்ள இந்த உயரிய டத்தோ விருதை, தம்மை இந்த அளவிற்கு உயர்த்திய தமது அன்பிற்குரிய பெற்றோர்களுக்கும், எப்போதும் துணையாக இருக்கும் உறவினர்களுக்கும், மற்றும் என் மீது மாறாத அன்பு கொண்ட நண்பர்களுக்கும், பினாங்கு அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியுடன் சமர்ப்பணம் செய்வதாக டத்தோ தனபதி குமைரயா தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட தீவிரச் சிகிச்சை நோயாளிகளின் உயிர்காக்கும் தொழில்நுட்பங்களுக்காகப் பங்காற்றி வரும் இவரது மனிதாபிமானப் பணிகள், வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து தொண்டாற்ற வாழ்த்துகிறோம்.









