நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில், கட்சிக்கு புத்துயிரூட்டும் நோக்கில் மூன்று புதிய முகங்களை ஜசெக கட்சி அதிகாரப்பூர்வமாகக் களமிறக்கியுள்ளது. அதேவேளையில், தொகுதி நிலவரத்தைக் கருத்தில்கொண்டு, 8 நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதிகளைத் தக்கவைக்க மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இதன்படி, தெமியாங் தொகுதியில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்கின் அரசியல் செயலாளரான 42 வயது ஹோ வெங் வா போட்டியிடுகிறார். மம்பாவ் தொகுதியில் கட்சியின் சட்ட உதவிப் பிரிவுத் தலைவரும், வழக்கறிஞருமான லீ கை யெட் புதிய வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, சிரம்பான் ஜெயா தொகுதியில், முன்னாள் பொறியியலாளரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரின் சிறப்பு அதிகாரியுமான 40 வயது எஸ். முகுந்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மிக முக்கியக் கோட்டைகளாகக் கருதப்படும் இத்தொகுதிகளைத் தக்கவைக்க, இந்த மூன்று புதிய இளம் தலைவர்களுக்கும் கட்சித் தலைமை முழு நம்பிக்கை வழங்கியுள்ளது.








