ஈப்போ, ஆகஸ்ட்.07-
இந்திய மாது ஒருவர், உடலில் பெட்ரோல் எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து மரணமுற்றார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.20 மணியளவில் பேரா, செமோர், கிளேபாங்கில் உள்ள ஏயோன் பேரங்காடி முன்புறம் நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பாக இரவு 11. 26 மணியளவில் தீயணைப்பு, மீட்புப் படையினர் பொதுமக்களிடமிருந்து ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக மாநில இயக்குநர் சயானி சைடோன் தெரிவித்தார்.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, 40 வயது மதிக்கத்தக்க இந்திய மாது, உடலில் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர் சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த மாதுவைச் சோதனை செய்த போது அவர் இறந்து விட்டதை உறுதிச் செய்தனர் என்று சயானி சைடோன் குறிப்பிட்டார்.
உயிரிழந்த 40 வயது மாது, குணசித்ரா ஜெயகுமார் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது. இவர் ஈப்போ, தாமான் தாசேக் மேவா, பிஆர்எஸ்என் தாவாஸ் பாரு 8 ட்டைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து கருத்துரைத்த ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட், சம்பந்தப்பட்ட மாது, ஈப்போவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்ற போதிலும் கோலாலம்பூரிலிருந்து ஈப்போவிற்குத் திரும்பியுள்ளார் என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.
மரணத்திற்கானப் பின்னணிக் காரணங்களைத் தாங்கள் ஆராய்ந்து வரும் வேளையில், சம்பந்தப்பட்ட மாதுவின் குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் அடிப்படையில், தாங்கள் விசாரணை செய்து வருவதாக இன்று காலையில் ஈப்போவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஏசிபி அபாங் ஸைனால் விவரித்தார்.
சவப் பரிசோதனைக்காக அந்த இந்திய மாதுவின் உடல், ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைச் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








