கோலாலம்பூர், ஜனவரி.11-
பன்னாட்டு அளவில் சில நாடுகளில் நெஸ்லே பால் மாவு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நெஸ்லே மலேசியா நிறுவனம், நாட்டில் விற்பனை செய்யப்படும் தங்களின் தயாரிப்புகள் முற்றிலும் பாதுகாப்பானவை என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூலப்பொருள் ஒன்றில் Cereulide எனும் நச்சு பாதிப்பு கண்டறியப்பட்ட உடனேயே நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பாதிக்கப்பட்ட இரண்டு குறிப்பிட்ட உற்பத்தித் தொகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டு அவை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படாமல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே முடக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், பாதிக்கப்பட்ட தொகுதியைச் சேர்ந்த ஒரு டின் பால் மாவு மட்டும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டதால், அது குறித்து சுகாதார அமைச்சுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாக உறுதியளித்துள்ள நெஸ்லே, இது குறித்த சந்தேகங்களுக்கு அந்நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பயனீட்டாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, சுகாதார அமைச்சும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.








