கோலாலம்பூர், நவம்பர்.07-
பாதிரியார் ரேய்மண்ட் கோ மற்றும் சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் ஆகியோர் காணாமல் போன சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று செபூத்தே எம்.பி. திரேசா கொக், அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
அவ்விருவரும் காணாமல் போன சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அவர்கள் காணாமல் போன விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் போலீஸ்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரேசா கொக் வலியுறுத்தினார்.
இவ்விவகாரம் தொடர்பாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை முழு விசாரணை நடத்தி, அதன் முன்னேற்றங்கள் குறித்து சட்டத்துறை அலுவலகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீஸ் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதையும் திரேசா கொக் சுட்டிக் காட்டினார்.
உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும், போலீஸ் துறையும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி, அவ்விருவருக்கும் என்ன நேர்ந்தது என்பது குறித்து மூடி மறைக்காமல் அறிவிக்க வேண்டும். காரணம், இருவரின் விவகாரத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக திரேசா கொக் குறிப்பிட்டார்.








