ஷா ஆலாம், ஜூலை.26-
வெள்ளம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதி தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் புக்கிட் கெமுனிங் வட்டாரத்தை உள்ளடக்கிய ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 14வது மண்டலம் புறக்கணிக்கப்படுவது ஏன் என்று அதன் பொறுப்பாளரான கவுன்சிலர் யோகேஸ்வரி சாமிநாதன் வினவினார்.
புகார்கள் மீது தாமதமான நடவடிக்கை, அடிப்படை வசதிகள் அறவே இல்லாதது, சாலையில் பழுதுகள் நீண்ட காலம் சரி செய்யாமல் இருப்பது, கைவிடப்பட்ட விளையாட்டு மைதானங்கள் போன்ற பல பிரச்சினைகள் இப்பகுதி குடியிருப்பாளர்களைப் பெரும் அதிருப்திக்குள்ளாக்கி இருப்பதாக யோகேஸ்வரி கூறினார்.
சேவை அளிப்பு, அடிப்படை வசதிகளின் தரத்தை உயர்த்துதல், மேம்பாடு ஆகியவற்றில் இப்பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய போக்கு புக்கிட் கெமுனிங் வட்டாரத்தை மாநகர் மன்றம் மாற்றாந்தாய் பிள்ளை போல் நடத்துவதாக ஓர் எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்றார்.
புக்கிட் கெமுனிங் உள்பட மாநகரின் அனைத்து பகுதிகளும் நியாயமாகவும் சமநிலையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் நடந்த மாநகர் மன்றத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.
புக்கிட் கெமுனிங் வட்டாரமும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஒரு பகுதி என்பதை மறந்து விடலாகாது என்றார்.
தவிர, இவ்வட்டார மக்களும் வரி செலுத்துகின்றனர். மாநகர் மன்றத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் தோள் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வட்டாரத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தும்படி மாநகர் மன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்தார்.








