Dec 4, 2025
Thisaigal NewsYouTube
டச்சு மாடல் அழகியின் மரணம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை வழங்கும்படி அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

டச்சு மாடல் அழகியின் மரணம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை வழங்கும்படி அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

Share:

கோலாலம்பூர், ஜூலை.29-

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோலாலம்பூர், சிட்டி செண்டர், கேப்ஸ்குவேர் ரெசிடென்ஸ் ஆடம்பர வீடமைப்புப் பகுதியில் 20 ஆவது மாடியிலிருந்து விழுந்து நிர்வாணக் கோலத்தில் இறந்து கிடந்த டச்சு மாடல் அழகி இவானா ஸ்மிட் மரணம் தொடர்பில் அந்த மாடல் அழகியின் குடும்பத்திற்கு மலேசிய அரசாங்கம் 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அந்த 18 வயது இளம் அழகியின் மரணம் தொடர்பில் போலீசார் முழுமையான விசாரணையை நடத்தவில்லை என்றும் அவர்களின் விசாரணையில் கவனக்குறைவு நிகழ்ந்துள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

எனவே இதற்கு அரசாங்கம் தார்மீகப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்டப் பெண்ணின் குடும்பத்திற்கு மேற்கண்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று நீதிபதி ரோஸ் மாவார் ரொஸாயின் உத்தரவிட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி, அந்த ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் ஓர் அமெரிக்க தம்பதியருடன் விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட அந்த டச்சு மாடல் அழகி, 20 ஆவது மாடியிலிருந்து 6ஆவது மாடியில் கீழே விழுந்து நிர்வாணக் கோலத்தில் பிணமாகக் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வெளிநாட்டுப் பெண்ணின் மரணம் தொடர்பில் மேலும் விசாரணை தேவை என்று கடந்த 2019 ஆம் ஆண்டில் சட்டத்துறை அலுவலகத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுவேரா உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு மீதான புலன் விசாரணைத் தொடர்பில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சட்டத்துறை அலுவலகத்திற்கு போலீஸ் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஆணை பிறப்பித்து இருந்தார்.

அதற்கு முன்னதாக இவானா ஸ்மிட் மரணம் ஒரு விபத்து என்று வகைப்படுத்தப்படுவதாகவும், அதே வேளையில் அறிமுகமான அல்லது அறிமுகமில்லாத ஒரு நபரின் செயல் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.

எனினும் இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸ் துறை நிறைவேற்றத் தவறிவிட்டதாக இன்றைய தீர்ப்பில் நீதிபதி ரோஸ் மாவார் ரொஸாயின் தெரிவித்தார்.

தனது மகளின் மரணத்தில் சூது நிகழ்ந்துள்ளது என்றும், போலீஸ் துறை முழுமையாக விசாரணை செய்யவில்லை என்றும் கூறி, அந்த டச்சு மாடல் அழகியின் தாயார் கிரிஸ்டீனா கேரலின், கடந்த 2020 ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் மற்றும் போலீஸ் துறைக்கு எதிராக இந்த சிவில் வழக்கைத் தொடுத்து இருந்தார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பில் பிரபல வழக்கறிஞர் டத்தோ எஸ்என் நாயர் ஆஜராகினார்.

Related News

டச்சு மாடல் அழகியின் மரணம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீ... | Thisaigal News