பெக்கான், ஜனவரி.09-
பகாங், பெக்கான் அருகே உள்ள கம்போங் தெமாய் தெங்கா பகுதியில் கடந்த வியாழக்கிழமை மாலையில் சிறுவன் ஒருவனை மலைப்பாம்பு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 வயதுடைய ஒரு சிறுவன், தனது வீட்டின் அருகே உள்ள ஆற்றுப் பகுதியில் புதர் மறைவில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒரு பெரிய மலைப்பாம்பு திடீரென அவனைப் பிடித்துச் சுற்றிக் கொண்டது.
சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அவனது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், உடனடியாகப் பாம்பிடமிருந்து அவனை மீட்கப் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பாம்பின் பிடியிலிருந்து சிறுவன் மீட்கப்பட்டான். பின்னர் அந்த மலைப்பாம்பு பொதுமக்களால் பிடிபட்டது.
பாம்பு இறுக்கியதில் சிறுவனுக்கு உடல் ரீதியாகக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அவனது விலா எலும்பு மற்றும் கை, கால் பகுதிகளில் வலி மற்றும் சிராய்ப்புகள் ஏற்பட்டதால், அவன் உடனடியாக சிகிச்சைக்காக பெக்கான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். தற்போது சிறுவன் அபாயக் கட்டத்தைத் தாண்டி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








