கோலாலம்பூர், ஜூலை.18-
நாட்டின் நீதித்துறையில் உயர்நிலைப் பொறுப்புகளுக்கு புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது நீதி பரிபாலனத்தில் எந்தத் தலையீடும் இல்லை என்பதை நிரூபிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
புதிய நியமனங்களை அறிவிப்பதில் ஏதேனும் தாமதங்கள் ஏற்பட்டு இருக்குமானால், நியமன செயல்முறையில் ஏற்பட்ட கால தாமதமாக இருக்கும் பிரதமர் விளக்கினார்.
நாட்டின் தலைமை நீதிபதி உட்பட முக்கியப் பொறுப்புகள் நிரப்பப்பட்டு விட்டன. இந்நிலையில் நீதித்துறையில் என்ன நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் வினவினார்.
இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நீதிபதிகள் நியமனத்தில் யாரையும் புறக்கணிக்கவில்லை. அதே வேளையில் நீதிபதிகள் நியமன ஆணையத்திற்கு எந்தவொரு நீதிபதியையும் தாம் பரிந்துரைக்கவில்லை என்று பிரதமர் விளக்கினார்.
நீதிபதிகள் நியமன ஆணையம் முன் வைத்தப் பரிந்துரைக்கு ஏற்பட நீதிபதிகள் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால், முந்தைய அரசு நிர்வாகங்களைப் போல் தாம் எந்த முடிவுகளிலும் தலையிட்டதில்லை என்றும் நீதிபதிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்ததும் இல்லை என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.
நீதித்துறை சுதந்திரம் எல்லாக் காலக் கட்டங்களிலும் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதுவே தமது விருப்பமாகும் என்று அன்வார் விளக்கினார்.
நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லேவும், அப்பீல் நீதிமன்றத் தலைவராக டத்தோ அபு பாக்கார் ஜாயிஸும், சபா, சரவாக் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக டத்தோ அஸிஸா நவாவியும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமினால் நியமிக்கப்பட்டு இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் அன்வார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.








