புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர்.14-
அதிகமான மாணவர் எண்ணிக்கையால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்பறைப் பற்றாக்குறையைச் சமாளிக்க, Industrialised Building System - IBS எனப்படும் தொழில்துறை சார்ந்த கட்டட அமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ள அணுகுமுறைகளில் ஒன்றாகக் கல்வி அமைச்சு கருதுகிறது. IBS முறையானது மிக விரைவாக சில மாதங்களிலேயே வகுப்பறைகளை அமைத்துவிடும் என்பதால், இது கல்வி அமைச்சின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் இந்த அணுகுமுறையைப் பெரிய அளவில் விரிவுபடுத்துவது குறித்து கல்வி அமைச்சு தற்போது ஆய்வு செய்து வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 127 கூடுதல் வகுப்பறைகள் அமைக்கும் திட்டங்கள் IBS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 70 பள்ளிகள் சிலாங்கூரில் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 100% நிறைவடைந்து விட்டதாக ஃபாட்லீனா தகவல் வெளியிட்டார்.








