கோலாலம்பூர், டிசம்பர்.16-
தம் மீதும், தமது சேவையின் மீதும் முழு நம்பிக்கை வைத்து மனித வள அமைச்சராகப் பதவி உயர்த்தியிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அதே வேளையில் மடானி மலேசியாவின் அபிலாஷைகளுக்கு ஏற்ப நாடு மற்றும் இந்திய சமூகம் உட்பட மலேசியர்களின் நம்பிக்கைகளை உறுதிச் செய்வதற்காகப் பிரதமர் தமக்கு வழங்கிய புதிய பொறுப்புகளையும், கடமைகளையும் முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவதற்கு உறுதிக் கொண்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
பிரதமர் இன்று பிற்பகலில் அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சரான 44 வயது டத்தோ ஶ்ரீ ரமணன் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தம்மை முழு அமைச்சராகப் பிரதமர் பதவி உயர்த்திருப்பது தொடர்பில் இன்று மாலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ ரமணன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முழு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது மூலம் நாட்டில் உள்ள இந்திய சமூகத்தையும் தாம் பிரதிநிதிப்பதாகக் கூறிய டத்தோ ஶ்ரீ ரமணன், இந்த மரியாதையையும், கெளரவத்தையும் வழங்கிய பிரதமருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாளை நடைபெறும் பதவியேற்புச் சடங்கிற்குப் பின்னர் விரைவில் மனித வள அமைச்சின் உயர் அதிகாரிகளைச் சந்திக்கவிருப்பதாக டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.
தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சராகத் தாம் பொறுப்பேற்று, சிறப்பான பங்களிப்பை வழங்குவதற்குத் தமக்கு எல்லா நிலைகளிலும் துணை நின்ற அமைச்சின் அதிகாாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சராகத் தாம் சேவையாற்றிய கிட்டத்தட்ட இந்த இரண்டரை ஆண்டுகளில், இந்திய சமூகத்தின் பொருளாதார மேன்மையை உயர்த்துவதில் தாம் முன்னெடுத்தத் திட்டங்களைப் பலப்படுத்துவதில் பக்கபலமாக இருந்து தமக்கு துணை நின்ற அமைச்சின் அனைத்து ஏஜென்சிகளுக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ஶ்ரீ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








