மலேசிய இந்திய வியாபாரிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அவர்களின் வர்த்தகத்தை பாதிக்கச் செய்யக்கூடிய எக்ஸ்போ என்ற பெயரில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் விற்பனை சந்தைகள் முடக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு உள்ளூர் இந்திய வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்நிய நாட்டு வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் இது போன்ற எக்ஸ்போ வர்த்தக சந்தைகளை அரசாங்கம் முடுக்குவது மூலமே உள்ளூர் வியாபாரிகளின் வர்த்தகத்தையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்று மலேசிய சிறு வர்த்தகர்களின் குரலாக விளங்கும் திருமதி கலா பாலமுரளி வலியுறுத்தியுள்ளார்.
எக்ஸ்போ என்றால் என்ன என்ற அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியாமல் ஆண்டு முழுவதும் வழங்கப்படும் கும்பல் ஒன்றினால் நடத்தப்படும் இத்தகைய வர்த்தக சந்தைகளால் உள்ளூர் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் பெரியளவில் சுரண்டப்படுகின்றனர் என்று கலா பாலமுரளி குற்றஞ்சாட்டுகிறார்.
கோவிட் 19 பாதிப்பினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய சிறு வியாபாரிகள், தங்களின் வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்கு பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நிய வியாபாரிகளிடமிருந்து மலேசிய இந்தியர் வர்த்தகர்களின் நலனை பாதுகாப்பதற்கு அரசாங்கமும், அதனை சார்ந்த அமலாக்க ஏஜென்சிகளும் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மலேசிய இந்திய வர்த்தகர்களுக்கு உண்டு வாழ்வு என்று இந்திய வியாபாரிகள் சார்பில் கலா பாலமுரளி கேட்டுக்கொண்டுள்ளார்.








