நாடு முழுவதும் 192 நீதிமன்றங்களில் ஐந்து ஆண்டுகளாக முறையான அரசாங்க ஒப்பந்தம் இன்றி இ-ஜாமின் பிணைத் தொகை முறையை நடத்தி வந்த டாபாட் விஸ்தா (எம்) செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஜசெக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தினார்.
இன்று மக்களவையில் பேசிய அவர், கோடிக்கணக்கான ரிங்கிட் பிணைத் தொகையை கையாளும் அளவுக்கு அந்த நிறுவனம் எவ்வாறு பொறுப்பேற்றது என்றும், அதன் நிர்வாகிகள் யார், அவர்களின் தகுதிகள் மற்றும் அனுபவங்கள் என்ன என்பதையும் அதிகாரிகள் விசாரித்தனரா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, 2024 டிசம்பர் 31 நிலவரப்படி டாபாட் விஸ்தா நிறுவனம் ரிங்கிட் 193.71 மில்லியன் பிணைத் தொகையை ஒருங்கிணைந்த அறக்கட்டளைக் கணக்கில் செலுத்தாமல், தனது வர்த்தகக் கணக்கில் வைத்திருந்ததாக பொதுக் கணக்குக் குழு கண்டறிந்துள்ளது. மேலும், இ-ஜாமின் பதிவுகளுக்கும் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளுக்கும் இடையே ரிங்கிட் 557,258 சரிபார்க்கப்படாத முரண்பாடும் இருப்பதாகக் குழு தெரிவித்தது.
ஐந்து ஆண்டுகளாக ஒப்பந்தமின்றி செயல்பட்டது நிதி விதிமுறைகளை மீறிய மிக நீண்ட காலம் எனக் குறிப்பிட்ட பொதுக் கணக்குக் குழு, முழுமையான அரசாங்கக் கட்டுப்பாட்டில் இணையவழி பிணைச் செலுத்தும் முறையை நீதித்துறை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.








