கலும்பாங்–கோலா குபு பாரு இடையே ஏற்பட்ட சிக்னல் அமைப்பு கோளாறு காரணமாக கேடிஎம் கொமுட்டர் மற்றும் இடிஎஸ் ரயில் சேவைகளில் ஏற்பட்ட தாமதத்துக்கு கேடிஎம்பி நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த கோளாறு காரணமாக கேடிஎம் கொமுட்டர் ரயில் எண் 2389 அதிகபட்சமாக 230 நிமிடங்களும், கேஎல் செண்ட்ரல்-பட்டவொர்த் இடையிலான இடிஎஸ் இரயில் 305 நிமிடங்களும் தாமதமாகின.
இதனிடையே ரவாங்-ஈப்போ இரட்டை ரயில் பாதை மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருவதால், தாமதத்தின் தாக்கம் மேலும் அதிகரித்ததாக கேடிஎம்பி தெரிவித்துள்ளது.

மேலும், சீரமைப்புப் பணிகள் இன்று அதிகாலை 5.15 மணியளவில் நிறைவடைந்ததுடன், தஞ்சோங் மாலிமிலிருந்து முதல் கொமுட்டர் ரயில் 5.45 மணியளவில் புறப்பட்டது.
இந்நிலையில், தற்போது சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருவதாகவும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு, பானங்கள் வழங்கப்பட்டதுடன், பயணத்தைத் தொடராதவர்களுக்கு நடைமுறைகளுக்கு உட்பட்டு முழு கட்டணத் தொகையும் திருப்பி வழங்கப்படும் என கேடிஎம்பி தெரிவித்துள்ளது.








