கிள்ளான், நவம்பர்.13-
கோலக்கிள்ளான், பண்டமாரான் கம்போங் பாப்பான் குடியிருப்புப் பகுதியில் வீடுகள் உடைக்கப்படும் நடவடிக்கைக்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் PSM கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன், அரசு சாரா இயக்கத்தைச் சேர்ந்த மைத்திரையர், கம்போங் பாப்பான் குடியிருப்பாளர் ஒருவர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுவாராம் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த Jernell Tan தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அருட்செல்வம் மற்றும் இதர இரண்டு நபர்கள் ஒரு நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நேற்று நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பட்டார்.
கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக வாழ்ந்த, இந்தியர்கள் அதிகளவில் குடியிருந்த கம்போங் பாப்பான் குடியிருப்புப் பகுதியில் உள்ள பல வீடுகள் நேற்று உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன.
தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் மேம்பாட்டுத் திட்டத்திற்காக அங்கு குடியிருப்போரை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களச் சந்தித்து வந்த இவர்களும் பலர் கட்டம் கட்டமாக வெளியேறியுள்ளனர். எனினும் மாற்று வீடுகள் இல்லாமல் வசதி குறைந்த நிலையில் உள்ள குடும்பங்கள் மட்டுமே அங்கே தொடர்ந்து தங்கி வந்தன.
வீடுகளை உடைக்கும் நடவடிக்கை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.








