சுங்கை பூலோ சிறைச்சாலையிலிருந்து சிறுவர் பாலியல் குற்றச்சாட்டிற்குள்ளான கைதி ஒருவர், தப்பியது குறித்து அதிகாரிகள் வெளிப்படையான விளக்கமளிக்க வேண்டுமென கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்புமிக்க ஒரு சிறை வளாகத்திலிருந்து இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒருவர் எப்படி எளிதாகத் தப்ப முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். "அவருக்கு விலங்கு இடப்பட்டிருந்ததா? அல்லது அதிகாரிகளின் கவனக்குறைவால் அவர் வெளியேறினாரா? இதில் யாருடைய உதவியாவது இருந்ததா?" என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ள லிம் லிப் எங், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
தப்பியோடியவர் 24 வயது முகமது ஹசன் என்ற பாகிஸ்தான் நாட்டவர் ஆவார். ஷா ஆலாம் நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்துவிட்டு மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது, சிறை வளாகத்தில் அவர் தப்பியோடியதாகத் தெரிகிறது. ஆரஞ்சு நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற கால்சட்டை அணிந்திருந்த அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நம்பகத்தன்மை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக லிம் லிப் எங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








