Jan 27, 2026
Thisaigal NewsYouTube
அன்வருக்கு எதிரான வழக்கு: வாதாட அனுமதி கோருகிறார் வேதமூர்த்தி
தற்போதைய செய்திகள்

அன்வருக்கு எதிரான வழக்கு: வாதாட அனுமதி கோருகிறார் வேதமூர்த்தி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.27-

மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரான பி. வேதமூர்த்தி, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி மற்றும் பிரதமர் நியமனத்திற்கு எதிராகத் தான் தொடர்ந்துள்ள வழக்கில், தன்னையும் ஓர் இணை வழக்கறிஞராகச் செயல்பட அனுமதிக்கக் கோரி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.

தான் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர் என்பதால், நீதிமன்றத்தில் வாதாடத் தனக்குத் தகுதியுண்டு என்று அவர் தெரிவித்துள்ளார். அன்வாரின் வழக்கறிஞர் ரஞ்சித் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், இவ்வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் அன்வாரின் மனு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டில் அன்வர் இப்ராஹிமிற்கு வழங்கப்பட்ட முழுமையான அரச மன்னிப்பு, குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் ஐந்து ஆண்டு கால தகுதியிழப்பை நீக்காது என்பது வேதமூர்த்தியின் முக்கிய வாதமாகும்.

எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 48 பிரிவின் கீழ் அன்வார் மக்களவையில் அமர தகுதியற்றவர் என்றும், கடந்த 2022 பொதுத்தேர்தலில் தம்புன் தொகுதியில் அவர் பெற்ற வெற்றியும், அதன் பிறகு அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் வேதமூர்த்தி தனது மனுவில் கோரியுள்ளார்.

Related News