புத்ராஜெயா, டிசம்பர்.30-
வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் ஒன்றில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், அதன் புறப்பாட்டு வாயில்களில், பாதுகாப்புச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.
உச்சக் கட்டப் பயணக் காலங்களில், தற்போது பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடமானது அதிக நெரிசலை ஏற்படுத்துவதால், இச்சோதனையானது புறப்பாட்டு வாயில்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றமானது Malaysia Airports Holdings Bhd, சுங்கத்துறை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில், இந்த மாற்றத்தினால், பயணிகளின் பாதுகாப்புச் சோதனையில் எந்த ஒரு இடையூறும் ஏற்படாது என்றும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக பயணிகள் முழுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சு விளக்கமளித்துள்ளது.








