கூலாய், ஆகஸ்ட்.18-
ஜோகூர், கூலாய், ஜாலான் இஸ்மாயிலில் உள்ள ஓர் உணவகத்தில் மாது ஒருவரிடம் வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர், சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
இந்த வழிபறிக் கொள்ளை தொடர்பில் 50 வயது மாது ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.35 மணியளவில் புகார் அளித்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டான் செங் லீ தெரிவித்தார்.
உணவகத்தின் மேஜை மீது தனது கைப்பையை வைத்து விட்டு, அந்த மாது காலை சிற்றுண்டியை உண்டு கொண்டிருந்த வேளையில் கடைக்குள் நுழைந்த அந்த நபர், மின்னல் வேகத்தில் கைப்பையை எடுத்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்றதாக ஏசிபி டான் குறிப்பிட்டார்.
அந்த கைப்பையில் ஆயிரம் ரிங்கிட் ரொக்கம் மற்றும் அடையாள ஆவணங்களை வைத்திருந்ததாக அந்த மாது தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டு இருந்தார் என்று ஏசிபி டான் விவரித்தார்.








