May 5, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் சிகரெட் துண்டை வீசிய சிங்கப்பூர் இளைஞருக்கு 1,500 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் சிகரெட் துண்டை வீசிய சிங்கப்பூர் இளைஞருக்கு 1,500 ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.09-

கோலாலம்பூரில் பொது இடத்தில் சிகரெட் துண்டைப் பொறுப்பற்ற முறையில் வீசியதை ஒப்புக் கொண்ட 25 வயது சிங்கப்பூர் இளைஞர் நூ குர்சைனி காயாட் என்பவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 1,500 மலேசிய ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி சித்தி ஷாகீரா மொக்தாருடின் உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 1.45 மணியளவில் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் அவர் இந்தச் செயலைச் செய்துள்ளார். அபராதத்துடன் சேர்த்து, ஒரு மாத காலத்திற்குள் நான்கு மணிநேரச் சமூகச் சேவையைச் செய்ய வேண்டும் என்றும் அவருக்கு நீதிமன்றம் ஆணையிட்டது.

2007-ஆம் ஆண்டு திடக்கழிவு மற்றும் பொதுத் தூய்மை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, பொது இடத்தில் குப்பை வீசுவோருக்கு அதிகபட்சமாக 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்குள் மொத்தம் 12 மணிநேரச் சமூகச் சேவை தண்டனையாக வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News