கோத்தா பாரு, ஜனவரி.22-
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலீட்டாளர்களை 300 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் 'டான் ஶ்ரீ' அந்தஸ்து கொண்ட ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
60 வயது மதிக்கத்தக்க அந்த நபர் நேற்று எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டார். இன்று காலை புத்ராஜெயா நீதிமன்றம் அவரை மேல் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கியுள்ளது என்று எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட டான் ஶ்ரீயுடன் சேர்த்து, ஒரு முதலீட்டு நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இந்த பெரிய அளவிலான மோசடியில் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் இணைந்து பல்வேறு முதலீட்டுத் திட்டங்களின் மூலம் அதிக லாபம் தருவதாகக் கூறி முதலீட்டாளர்களை நம்ப வைத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 300 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இது போன்ற கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களில் எளிதில் ஏமாந்து விட வேண்டாம் என்றும், இறுதியில் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் அஸாம் பாக்கி எச்சரித்துள்ளார்.








