ஈப்போ, அக்டோபர்.07-
ஈப்போ வட்டாரத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பெண்களைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மூவரைக் கண்டுபிடிப்பதற்கு போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.
முதல் சம்பவத்தில் ஈப்போ, மெங்களம்புவை சேர்ந்த ஒரு பஞ்சாபிப் பெண்ணான 17 வயது ஷர்விண்டர் கவுர் சொஹான் சிங் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மெங்லெம்பு, தாமான் அர்கிட், லெபோ கிளேடாங்கை முகவரியாகக் கொண்ட அந்த பஞ்சாபிப் பெண் காணாதது குறித்து அவரின் குடும்பத்தினர் மெங்களம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக ஏசிபி அபாங் ஸைனால் குறிப்பிட்டார்.
இரண்டாவது சம்பவத்தில் 22 வயது அனுசியா மைக்கல் தாஸ் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர், ஈப்போ, ஜெலாப்பாங், தாமான் சிலிபின் பகுதியில் காணாமல் போனதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
மூன்றாவது சம்பவத்தில் ஈப்போ, மேடான் கிளேபாங் இண்டாவைச் சேர்ந்த 45 வயது சாய் ஃபூ சிங் என்ற சீன மாது காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மூவரும் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அல்லது அவர்களை நேரில் கண்டவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ஏசிபி அபாங் ஸைனால் கேட்டுக் கொண்டுள்ளார்.








