ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.17-
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு, பினாங்கு தனது நகர்புற வரைபடத்தை மறுவரையறை செய்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் 25 புதிய நகரங்களை அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 4-ம் ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட இந்தத் திருத்தம் மூலம் மாநிலம் முழுவதும் 210,000 க்கும் மேற்பட்ட நில உரிமங்களும், 84,000 அடுக்குமாடி உரிமங்களும் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன.
கடந்த 1966-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அசல் நகர அறிவிப்புகளை விட தற்போது பினாங்கு மாநில மக்கள் தொகையும், பொருளாதார வளர்ச்சியும் அதிகமாகியிருப்பதால், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.
இந்த விரிவாக்கத்தினால் தற்போது பினாங்கு மாநிலத்தில் மொத்தம் 42 நகரங்கள் உருவாகியுள்ளன. அவற்றில் 17 ஏற்கனவே இருந்த நிலையில், கூடுதலாக தற்போது 25 நகரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.








