கோலாலம்பூர், ஜூன் 21-
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் சேவைக்கு பின்னரும் வாழ்நாள் முழுவதும் அதிகபட்சத் தொகையில் ஓய்வுதியம் வழங்கப்படுவது மிகுந்த அவமானமாகும் என்று மனித உரிமைப் போராட்டவாதி அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஓர் நாடாளுமன்ற உறுப்பினர், தனது சேவைக்காலத்தில் ஆற்றிய பணியுடன் ஒப்பிடும் போது , அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுவதும், அதனை பெறுவதும் வெட்கக்கேடான ஒன்றாகும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான அம்பிகா வர்ணித்துள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே ஒரு முறை, மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கூட, தனது ஆயுட்காலம் முழுவதும் அதிகப் பட்ச ஓய்வுதியத் தொகையை பெறுவதற்கு தகுதி பெறுகிறார் என்று அம்பிகா சுட்டிக்காட்டினார்.
அப்படியென்றால் வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே சேவையாற்றிய எம்.பி.களுக்கு வழங்கப்படும் ஓய்வுதியத்திற்கும், தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை பொதுச் சேவைத்துறையில் பிணைத்துக்கொண்ட முன்னாள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்திற்கும் என்ன வேறுபாடு என்று அம்பிகா கேள்வி எழுப்பினார்.
ஓய்வூதியத்திற்கு தகுதி பெறும் முன்னாள் அரசு ஊழியரும், ஒரே ஒரு தவணை காலம் மட்டுமே எம்.பி. பதவி வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒன்றா? இருவரையும் சமத் தட்டில் வைத்து பார்ப்பதா? என்று அம்பிகா கேள்வி எழுப்பினார்.
சில எம்.பி.க்களின் சேவையையும், அவர்கள் பங்காற்றிய காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அவர்களுக்கு ஆயுட் காலம் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுவது வெட்கக்கேடான ஒன்றாகும். இதனை தாம் முழுமையாக எதிர்ப்பதாக அம்பிகா குறிப்பிட்டார்.
சில எம்.பி.க்கள், துணை அமைச்சர், அமைச்சர் அல்லது மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி வகித்த பட்சத்தில் அவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகமான ஓய்வுதியத்தொகை வழங்கப்படுவது வெட்கித் தலைக்குனிய வேண்டிய விஷயமாகும் என்று அம்பிகா சாடினார்.
சேவை காலத்திற்கு பிறகு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாதந்திர ஓய்வூதியத் தொகை சராசரி 30 ஆயிரம் வெள்ளி வரை எட்டுகிறது.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகை வழங்கப்படுவதை காட்டிலும் அதனை தொழிலாளர் சேமநிதியான EPF. பிற்கு மாற்றப்பட வேண்டும்.
அப்படி மாற்றினால் தலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கக்கூடிய ஓய்வூதியத் தொகையில் சராசரி 24 லட்சம் வெள்ளியை அரசாங்கம் சிக்கனப்படுத்த முடியும் என்று அம்பிகா பரிந்துரை செய்துள்ளார்.








