ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.05-
நிறுவனத்திற்குச் சொந்தமான பணம், கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாக நாடகமாடுவதற்கு லோரி ஓட்டுநர் ஒருவர் , தனது வயிற்றைச் சொந்தமாகக் கத்தியால் கீறிக் கொண்டதாக பினாங்கு திமோர் லாவுட் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அப்துல் ரோஸாக் முகமட் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை பினாங்கு, கெலுகோர், பெர்சியாரான் மிண்டெனில் நடந்த இந்தச் சம்பவத்தில் காயத்திற்கு ஆளான 32 வயது மதிக்கத்தக்க லோரி ஓட்டுநர், நிறுவனத்திற்குச் சொந்தமான மூவாயிரம் ரிங்கிட் பணத்தை உண்மையிலேயே சூதாட்டத்தில் இழந்து விட்டார்.
அதனை மறைப்பதற்கு மூவர் அடங்கிய கும்பல் ஒன்று தன்னைக் கத்தியால் தாக்கிய பின்னர் ரொக்கப் பணத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறியுள்ளார்.
வயிற்றில் கீறல் காயங்களுடன் ரத்தம் வடிந்த நிலையில் லோரியில் காணப்பட்ட அந்த நபர், சிகிச்சைக்குப் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளைச் சம்பவம் குறித்து முன்னுக்கு பின் முரணாகத் தகவலை வழங்கியுள்ளார்.
இறுதியில் தாம் ஏமாற்ற முற்பட்டதை அவர் ஒப்புக் கொண்டார் என்று ஏசிபி அப்துல் ரோஸாக் தெரிவித்தார்.








