May 5, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவப் பரிசோதனைக்காக கடப்பிதழ்களில் திருத்தம்: வங்காளதேச மாணவர் கைது: குடிநுழைவுத் துறை நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

மருத்துவப் பரிசோதனைக்காக கடப்பிதழ்களில் திருத்தம்: வங்காளதேச மாணவர் கைது: குடிநுழைவுத் துறை நடவடிக்கை

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.13-

மலேசிய குடிநுழைவுத் துறையின் புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு, கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி கோலாலம்பூர், செந்தூல் பகுதியில் நடத்திய சோதனையில், போலி கடப்பிதழ் தயாரிப்பில் ஈடுபட்ட 27 வயது வங்காளதேச இளைஞர் ஒருவரைக் கைது செய்தது.

செல்லுபடியாகும் மாணவர் வருகை அட்டையை வைத்திருந்த அந்த இளைஞர், கடந்த ஆறு மாதங்களாக கடப்பிதழ்களைத் திருத்தி அமைக்கும் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடமிருந்து 22 போலி வங்காளதேசக் கடப்பிதழ்கள், கணினி உபகரணங்கள், லேசர் இயந்திரங்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக குடிவரவுத் துறை துணை தலைமை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனையில் தகுதி பெறாத அல்லது தோல்வியுற்ற வங்காளதேச நாட்டவர்களுக்கு உதவுவதையே இந்த கும்பல் நோக்கமாகக் கொண்டுள்ளது. தகுதி பெறாத தொழிலாளர்களின் கடப்பிதழ்களைத் திருத்தி அமைத்து, அவர்கள் மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல வழிவகை செய்துள்ளனர்.

இதற்காக ரன்னர் சேவையைப் பயன்படுத்தியும், ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்தும் ரகசியமாகச் செயல்பட்டு வந்த இக்கும்பல், மாதம் 200 முதல் 300 கடப்பிதழ்கள் வரை போலியாகத் தயாரித்திருப்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என டத்தோ லோக்மான் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News