மலாக்கா, ஜூலை.31-
மலாக்கா மருத்துவமனையில் பணியாற்றும் 26 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் மருத்துவரும், பெண் மருத்துவரும் கல்வத் குற்றத்தில் பிடிபட்டதைத் தொடர்ந்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது உட்பட ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனை மலாக்கா மாநில சுகாதார, மனித வள மற்றும் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங்வே ஹீ செம் தெரிவித்துள்ளார்.
மலாக்கா மாநில இஸ்லாமிய சமய இலாகாவின் அமலாக்க அதிகாரிகளால் ஒரு வாடகை வீட்டில் கையும் களவுமாகப் பிடிப்பட்ட அந்த மருத்துவ ஜோடியினர், சமய இலாகாவின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்னர்.
மலாக்கா மாநில சுகாதாரத்துறையில் அவ்விருவரும் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர் என்று டத்தோ ங்வே ஹீ செம் குறிப்பிட்டார்.
அவ்விருவரையும் வேலை நீக்கம் செய்வது, ஒழுங்கு நடவடிக்கையில் அடங்கும் என்று அவர் விளக்கினார்.
விசாரணை முடிவு தெரியும் வரையில் அவர்கள் மலாக்கா மருத்துவமனையில் பணியாற்றுவதற்குத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக டத்தோ ங்வே ஹீ செம் மேலும் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில், இஸ்லாமிய அதிகாரிகள் மற்றும் போலீசார் வாடகை வீடொன்றில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது அந்த மருத்துவ ஜோடியினர் கல்வத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.








