Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பெந்தோங்கில் மாயமான இந்தியக் குடும்பம் மீட்பு: குடும்பத் தகராறே காரணம் என போலீஸ் தகவல்
தற்போதைய செய்திகள்

பெந்தோங்கில் மாயமான இந்தியக் குடும்பம் மீட்பு: குடும்பத் தகராறே காரணம் என போலீஸ் தகவல்

Share:

பகாங், பெந்தோங்கில் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பெந்தோங், தாமான் ஓர்க்கிட் பகுதியைச் சேர்ந்த 41 வயதான எம். ரேகா மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளான 19 வயது ரூபன் , 17 வயது ஷரிவினா நாயர் , 16 வயது ஷாசினி நாயர் , 14 வயது பிரிதிவி நாயர் மற்றும் 4 வயது சிறுவன் லஷ்வின் நாயர் ஆகியோரே மீட்கப்பட்டவர்கள் ஆவர் என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரிண்டெண்டென் ஜைஹாம் முகமது கஹார் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் இவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் ஆஜராகினர்.

அறுவரும் காணாமல் போனது தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவே, தனது கணவருக்குத் தெரிவிக்காமல் ரேகா தனது பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது" என்று சூப்பரிண்டெண்டென் ஜைஹாம் தெரிவித்தார்.

முன்னதாக, தனது மனைவி மற்றும் பிள்ளைகளைக் காணவில்லை என 43 வயதான குடும்பத் தலைவர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இவர்களைக் கண்டுபிடிக்க ஒத்துழைப்பு வழங்கிய பெந்தோங் மக்களுக்கும் மற்ற அனைத்து தரப்பினருக்கும் போலீஸ் துறையினர் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக சூப்பரிண்டெண்டென் ஜைஹாம் தெரிவித்தார்.

Related News