ஷா ஆலாம், ஜூலை.15-
ஆட்சியாளர்களின் 269 ஆவது சமஸ்தானபதிகள் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
நாட்டின் நீதித்துறையின் கண்களாக விளங்கும் தலைமை நீதிபதி, அப்பீல் நீதிமன்றத் தலைவர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தொடங்கி வரும் 17 ஆம் தேதி வரை 3 தினங்களுக்கு சமஸ்தானபதிகள் மாநாடு நடைபெறுகிறது. 66 வயதை எட்டிய துன் தெங்கு மைமூன் துவான் மாட் மற்றும் டான் ஶ்ரீ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் ஆகியோர் முறையே தலைமை நீதிபதி, அப்பீல் நீதிமன்றத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து கடந்த ஜுலை 2,3 ஆம் தேதிகளில் ஓய்வு பெற்றனர்.
நீதித்துறையின் நான்கு தூண்களாக விளங்கும் தலைமை நீதிபதி, அப்பீல் நீதிமன்றத் தலைவர், மலாயா தலைமை நீதிபதி மற்றும் சபா, சரவா தலைமை நீதிபதி ஆகிய பதவிகளில் வெற்றிடமாக மாறியுள்ள முதல் இரண்டு பதவிகள் நிரப்பப்படுவது குறித்து சமஸ்தானபதிகள் முக்கியமாக விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டம் 122 B பிரிவின் கீழ் தலைமை நீதிபதி நியமனம் என்பது, பிரதமரின் ஆலோசனையின் பேரில் பரிந்துரைக்கப்படும் மனுதாரர்களின் பெயர்கள், ஆட்சியாளர் மன்றத்துடன் கலந்து பேசியப் பின்னர் மாமன்னர் நியமனம் செய்வதற்கு வகை செய்கிறது.
ஆட்சியாளர் மன்றம் என்பது நாட்டின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் பரிபாலனம் மட்டுமின்றி, நீதித்துறையின் உயர் பதவிகள் நியமன பரிந்துரையைச் சீர் தூக்கிப் பார்க்கி முக்கிய மன்றமாக விளங்குகிறது.
தலைமை நீதிபதி நியமனத்தில் திறன், நேர்மை, நம்பகத்தன்மை முதலியவை பிரதான அளவுகோலாகக் கருதப்படுகிறது.








