கோலாலம்பூர், டிசம்பர்.02-
BRICS கூட்டமைப்பில் மலேசியா சக பங்காளியாக பங்கேற்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, அதன் வேகத்தை அதிகரிக்கக் கூடும் என வெளியுறவு அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் BRICS கூட்டமைப்பில் சக பங்காளி நாடுகளில் ஒன்றாக மலேசியா அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் இந்த முடிவானது நமது சுதந்திரத்தையும், சார்பில்லா வெளியுறவுக் கொள்கையையும் காட்டுவதாகத் தெரிவித்துள்ள முகமட் ஹசான், BRICS கூட்டமைப்பில் பங்காளியாக இணைவது உலகளாவிய அளவில் மலேசியாவின் நிலையை உயர்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், ஆசியான், ஐ.நா, இஸ்லாமியக் கூட்டறவு அமைப்பு, அணி சேரா இயக்கம் மற்றும் ஜி77 உள்ளிட்ட அமைப்புகளில் மலேசியாவின் பங்களிப்பையும் இது வலுப்படுத்துவதாக முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
BRICS-இல் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும், உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்தின்படி எடுக்கப்படுவதால், மலேசியா தனது முழு உறுப்பினர் பதவிக்கான ஆதரவைப் பெற, அதன் பங்காளி அந்தஸ்தைத் தொடர்ந்து பயன்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








