கோலாலம்பூர், பிப்ரவரி.06-
இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெறவில்லை நிலையில், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி நளினி பத்மநாதன் தனது இறுதி எழுத்துப்பூர்வ தீர்ப்பை வழங்கியதைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அவருக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
சட்டத்துறைத் தலைவர் அலுவலகமான ஏஜிசியின் சிவில் பிரிவின் தலைவர் ஷாம்சுல் போல்ஹசான் பேசுகையில், பொதுச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டத் துறையில் நீதிபதி நளினி ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்றார். கூட்டரசு அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொள்வதில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் நீதிபதி நளினியின் அசாத்திய அறிவாற்றல், கடின உழைப்பு மற்றும் நுணுக்கமான கவனிப்புத் திறன் ஆகியவற்றைத் தாம் நேரில் கண்டதாக ஷாம்சுல் புகழாரம் சூட்டினார்.
66 வயதான நீதிபதி நளினிக்கு, பதவியில் நீடிப்பதற்காக மாமன்னர் வழங்கிய கூடுதலாக ஆறு மாத கால நீட்டிப்பு தற்போது நிறைவடைகிறது.
நளினி, தனது இறுதித் தீர்ப்பில், 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் வரும் "புண்படுத்தும்" மற்றும் "வருத்தமளிக்கும்" போன்ற சொற்கள் அரசியலமைப்பிற்கு உட்பட்டவை என்று தீர்ப்பளித்தார்.
கருத்துச் சுதந்திரம் என்பது சில வரம்புகளுக்கு உட்பட்டது என்றும், பாதுகாப்பான இணையச் சூழலை உறுதிச் செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தனது தீர்ப்பில் விளக்கினார்.
மூத்த வழக்கறிஞர் மாலிக் இம்தியாஸ் சர்வார் கூறுகையில், நீதிபதி நளினி நாட்டின் அரசியலமைப்புச் சட்டப் பரப்பில் ஒரு நீங்காத முத்திரையைப் பதித்துள்ளார் என்றும், அவரது தீர்ப்புகள் எதிர்காலத்தில் நாட்டிற்கு ஒரு முக்கியமான வழிகாட்டியாக அமையும் என்றும் புகழாரம் சூட்டினார்.








