கோலாலம்பூர், ஜனவரி.07-
பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் இன்று ஏற்பட்ட மிதமான நிலநடுக்கங்களால் மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தல் ஏதுமில்லை என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
முதல் நில நடுக்கம், காலை 11.03 மணி அளவில் ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவானது. இது பிலிப்பைன்ஸின் Bislig நகருக்குத் தென்கிழக்கே 129 கி.மீ தொலைவில் 67 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.
இரண்டாவது நில நடுக்கம், மதியம் 12.13 மணி அளவில் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவானது. இது பிலிப்பைன்ஸ், Bislig நகருக்குத் தென்கிழக்கே 136 கி.மீ தொலைவில் 65 கி.மீ ஆழத்தில் நிலைக் கொண்டிருந்தது.
இந்த இரண்டு நிலநடுக்கங்களாலும் மலேசியாவிற்கு எவ்விதமான சுனாமி பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தங்களது கண்காணிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மெட்மலேசியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.








