ஜார்ஜ்டவுன், டிசம்பர்.20-
பினாங்கு, பெர்மாத்தாங் திங்கி லைட் தொழிற்பேட்டையில் இன்று அதிகாலை நடந்த தீ விபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் தீக்கிரையாகின.
இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
இன்று அதிகாலை 12.42 மணியளவில், இவ்விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீ விபத்தில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று 80 விழுக்காடும், அச்சகத் தொழிற்சாலை ஒன்று 30 விழுக்காடும் தீயில் கருகி சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாலை 5.26 மணியளவில், தீயானது முற்றிலுமாக அணைக்கப்பட்டதாகவும் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இத்தீவிபத்து குறித்தும், சேத நிலவரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.








