புத்ராஜெயா, ஆகஸ்ட்.15-
நாட்டில் இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பினரையும் இனி கண்டிப்பதோ, எச்சரிப்பதோ இருக்காது. மாறாக, நேரடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
மறைந்த மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரண விவகாரம் மற்றும் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடி தலைகீழாகக் கட்டடப்பட்டது உட்பட அண்மைய பிரச்சினைகளில் தொடங்கி, தற்போது தலைத்தூக்கி வரும் எதிர்மறை கூறுகளும், குற்றச்சாட்டுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.
சபாவில் நமது பிள்ளை ஸாரா கைரினா மரணத்திலிருந்து நாம் கொண்டாடி மதிக்க வேண்டிய ஜாலூர் ஜெமிலாங் தேசியக் கொடி பிரச்சினை வரை அனைத்தும் அரசியல் சூட்டை எழுப்பும் பதற்றம் நிறைந்த விவகாரங்களாக மாறி வருகின்றன.
அது சரியா, தவறா, அது பொய்யா, அது உண்மையா அல்லது அது கட்டுக் கதையா? என்பதை எதுவுமே கருத்தில் கொள்ளாமல் விமர்சிப்பது, அவமதிப்பது, திட்டுவது, தண்டிப்பது என்பது ஏற்புடையச் செயல் அல்ல என்று பிரதமர் வலியுறுத்தினார்.
எனவே இனி கண்டிப்பதற்கும், எச்சரிப்பதற்கும் இடம் இருக்காது. மாறாக, இந்த நாட்டைக் காப்பாற்ற, உறுதியான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தம்முடைய வலியுறுத்தலாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 20 ஆவது பிரதமப் பொதுச் சேவை அறக்கட்டளை மன்றத்தின் நிகழ்வில் உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இந்த நினைவுறுத்தலை விடுத்துள்ளார்.
மிரட்டல், அச்சுறுத்தல், நிந்தனை முதலிய செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் அவர்கள் யார், என்ன பொறுப்பில் உள்ளனர், அவர்களின் அந்தஸ்து என்ன முதலியவற்றைப் பொருட்படுத்தாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.








