சிரம்பான், நவம்பர்.05-
ஒன்பது வயது ஆட்டிசம் சிறுவனை வாகனத்திலேயே விட்டுச் சென்று, மரணம் நேர்ந்த சம்பவத்திற்குக் காரணமான வேன் ஓட்டுநர் ஒருவருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 2 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.
38 வயதுடைய வேன் ஓட்டுநருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட திருத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சுரிதா பூடின் இத்தண்டனையை விதித்தார்.
முகமட் நஸ்ரி உஸிர் என்ற அந்த நபர், சிறைவாசம் முடிவடைந்ததும், 6 மாதக் காலத்திற்கு 120 மணி நேரம் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி சிரம்பான், பண்டார் ஶ்ரீ செண்டாயானில் ஒரு வீட்டின் முன்புறம் அந்த வேன் ஓட்டுநர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 3 மணி நேரம், அந்த ஆட்டிசம் சிறுவனை வாகனத்திற்குள்ளேயே விட்டுச் சென்றதால், அந்தச் சிறுவன் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வேன் ஓட்டுநரின் கவனக்குறைவினால் சிறுவனுக்கு மரணம் நிகழ்ந்துள்ளது என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








