கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி டேசா பெட்டாலிங்கிலிருந்து ஆடவர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் போலீஸ் நிலையத் தலைவர் மற்றும் இதர நான்கு போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கின் விசாரணை அறிக்கை, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.
இந்த கடத்தலில் தொடர்புடையவர் மாவட்ட போலீஸ் தலைவராக இருப்பதால் இந்த விவகாரத்தை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கையாளும் என்று அவர் குறிப்பிட்டார். அந்த ஆடவர் கடத்தப்படுவதற்கு முன்னதாக அவர் கைது செய்யப்பட்டு, சாலாக் செலத்தான் பாரு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏசிபி சாம் ஹலிம் மேலும் கூறினார்.







