கோலாலம்பூர், நவம்பர்.06-
சில வழக்கறிஞர் நிறுவனங்களில் லஞ்சம் பெற்று வந்த 49 வங்கி அதிகாரிகள், இந்த நவம்பர் மாதத்தில் நீதிமன்றத்தில் கட்டம் கட்டமாக குற்றஞ்சாட்டப்படுவர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தகவல்கள் கூறுகின்றன.
இந்த 49 வங்கி அதிகாரிகளையும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு அனுமதி கிடைத்து விட்டது. அவர்கள் அனைவரும் ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை வாடிக்கையாளர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைத் தயார்படுத்துவதில் இந்த வங்கி அதிகாரிகள் சுயமாகவே சில வழக்கறிஞர் நிறுவனங்களை நியமித்து, அதன் மூலம் கமிஷன் என்ற போர்வையில் லஞ்சம் பெற்று வந்துள்ளனர்.
வங்கி அதிகாரிகளுக்கும், சில வழக்கறிஞர் நிறுவனங்களுக்கும் இடையில் வங்கி பண பரிவர்த்தனை, சந்தேகத்திற்கு இடமாக மாறியதைத் தொடர்ந்து இவர்களின் நடவடிக்கை ஆராயப்பட்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் தொடங்கிய ஓப் டைகர் சோதனை நடவடிக்கையின் மூலம் இவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர்.








