பத்துகேவ்ஸ், டிசம்பர்.17-
கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துகேவ்ஸ், அமாரா ரெசிடென்சி என்ற வீடமைப்புப் பகுதியில் ஆடவர் ஒருவர் வெட்டுக் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இதுவரை எட்டு பேரை கைது செய்துள்ளனர் என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் அரிஃபின் மஹமாட் நாசீர் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த அன்று காலை 10.35 மணியளவில் செலாயாங் மருத்துவமனையின் அவசரப் பிரிவிலிருந்து கிடைக்கப்பட்ட புகாரில் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாராங் ஏந்தி வந்த கும்பல் ஒன்று, 20 வயது இளைஞரைத் தாக்கி கடும் காயங்களை விளைவித்து இருப்பதாகத் தெரிய வந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
போலீசார் மேற்கொண்ட துரிதத் தேடுதல் நடவடிக்கையில் அன்றைய தினமே நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஏசிபி நூர் தெரிவித்தார்.
அந்த எட்டுப் பேரையும் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் போலீசார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








