கோலாலம்பூர், ஜனவரி.27-
இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட பிறகு, இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் பிடிபட்ட மூன்று மலேசியர்கள், "கேப்டன் பிரபா கும்பல்" என்ற ஆயுதமேந்திய வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
30 வயது மதிக்கத்தக்க இந்த மூவர் மீதும் இண்டர்போல் எனும் அனைத்துலக போலீசாரின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டர் விமான நிலையத்தில் அவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் புறப்பட்ட இடமான மும்பைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவர்கள் கிள்ளான் மற்றும் பந்திங் பகுதிகளில் நடந்த கொலை, தீவைப்பு மற்றும் ஆயுதங்களுடன் கூடிய தாக்குதல் போன்ற உயர்மட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.
மும்பை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை மலேசியாவிற்கு கொண்டு வர, புக்கிட் அமான் அதிகாரிகள் குழு மும்பை விரைந்துள்ளனர். இந்திய மற்றும் மலேசிய அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவர்கள் விரைவில் மலேசியா கொண்டு வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீந்திரன் ராஜ் குமரேசன், ஸ்ரீதரன் சுப்ரமணியம் மற்றும் பிரதீப் குமார் செல்வராஜ் என்ற அந்த மூவரும் 'கேப்டன் பிரபா' கும்பலின் முக்கியத் தலைவர்களாகக் கருதப்படுவதாலும், அவர்களுக்கு எதிரிகள் இருக்கலாம் என்பதாலும், அவர்களை மலேசியா கொண்டு வரும் போது Highest Level of Security எனும் உயர்மட்டப் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை விரைவில் மலேசியா கொண்டு வர இந்திய அதிகாரிகளுடன் மலேசிய போலீசார் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
மூவரும் மலேசியா கொண்டு வரப்பட்டவுடன், ஆவணப் பணிகள் முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








