கடந்த் 2024-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் மொத்தம் 4 லட்சத்து 81 ஆயிரத்து 119 சம்மன்கள் வழங்கப்பட்டதாக சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜேபிஜே அமலாக்கப் பிரிவு மூத்த இயக்குநர் டத்தோ முஹமட் கிஃப்லி மா ஹசான் கூறுகையில், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாதது, காலாவதியான வாகன உரிமம் மற்றும் காப்பீடு இல்லாதது ஆகியவை முக்கிய குற்றங்களாக கண்டறியப்பட்டன.
மேலும், வெளிநாட்டு ஓட்டுநர்களை முறையான ஆவணங்கள் மற்றும் தகுதிகளை சரிபார்க்காமல் குறைந்த செலவில் பணியமர்த்தும் உள்ளூர் முதலாளிகளும் பிரச்சினைக்கு காரணமாக இருப்பதாக முஹமட் கிஃப்லி தெரிவித்துள்ளார்.
கடந்த 3 மாதங்களாக விதிமீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், சில வழக்குகளில் அபராதம் செலுத்தி சமரசம் செய்வதற்கு பதிலாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








