சண்டாகான், நவம்பர்.19-
சபா மாநில கடற்பகுதிகளில், பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், அமெரிக்க கடலோரக் காவல்படைக் கப்பலான USCGC பயன்படுத்தப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
தற்போது கிள்ளான் துறைமுகத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அக்கப்பலானது, அமெரிக்காவில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக பயணம் செய்து மலேசியாவை வந்தடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பரமாரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் பாதுகாப்பு ரோந்துப் பணிகளுக்காக அக்கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.
மலேசியக் கடற்பகுதிகளில் கிட்டத்தட்ட 600,000 (6 லட்சம்) சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ரோந்து பணிகளை மேற்கொள்ள, இக்கப்பலானது பயன்படுத்தப்படும் என்றும் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், போதைப்பொருள், ஆயுதக் கடத்தல், மனிதக் கடத்தல் உள்ளிட்ட பிரச்னைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








