அலோர் ஸ்டார், செப்டம்பர்.12-
அலோர் ஸ்டாரில் ஓர் ஆணும், பெண்ணும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலையுண்ட பெண்ணின் முன்னாள் கணவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
யான் மாவட்டத்தில் குவார் செம்படாக்கில் நேற்றிரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் கொலைக்கான காரணம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக யான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹமிஸி அப்துல்லா தெரிவித்தார்.
இந்த இரட்டைக் கொலைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 30 வயது நபர் ஆழமான வெட்டுக் காயங்களுடன் ஒரு வீட்டின் முன் இறந்து கிடந்தார். அந்த வீட்டின் அருகாமையில் ஒரு காருக்குள் 28 வயது பெண் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததாக அவர் குறிப்பிட்டார்.








