காப்பார், ஆகஸ்ட்.06-
சிலாங்கூர், காப்பாரில் பழமை வாய்ந்த தோட்ட ஆலயத்தைக் கழிவுநீர்க் குளத்திற்கு அருகில் உள்ள இடத்திற்கு மாற்றுவதற்கு தோட்ட நிறுவனமான சைம் டார்பி முன் மொழிந்துள்ள பரிந்துரைக்கு மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
முந்தைய காலத்திலிருந்து சைம் டார்பி நிறுவனத்தின் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ள தோட்டப் பாட்டாளிகளின் தன்மானத்திற்கு இழுக்கையும் அவமரியதையையும் ஏற்படுத்தும் செயலாக இது அமைந்துள்ளது என்று பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ சமய செயல்குழுவின் தலைவருமான பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
இதே போன்றச் சம்பவம் கிள்ளான், புக்கிட் ராஜாவில் நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக் காட்டிய பாப்பாராய்டு, வழிபாட்டுத் தலங்களுக்கு நிலங்களை ஒதுக்குவதில் அலட்சியமும், உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத போக்கும் மேம்பாட்டாளரின் பொறுப்பற்றத் தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனத்தின் இந்தச் செயல், மடானி அரசாங்கத்தால் கட்டிக் காக்கப்படும் சமூக நீதிக்கு முரணாக உள்ளது என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.
வழிபாட்டுத் தலங்கள் என்பது இனத்தின் அடையாளமாகவும் ஆன்மீகத்தின் எடுத்துக் காட்டாகவும் விளங்குகின்றன. அவை வெறும் கட்டிடங்கள் அல்ல. மாறாக, சமூகத்தின் இறை நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சுபிட்சத்தின் அடையாளமாகும். பொருத்தமற்ற இடங்களில் ஆலயத்திற்கு நிலம் வழங்குவது மனித உரிமையை மீறும் செயலாகவும், பெரிய நிறுவனங்களின் தன்மூப்பான போக்கையும் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
இதுநாள் வரை சிலாங்கூர் மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கி வரும் தோட்டப் பாட்டாளிகளின் உரிமை, சமூக நலன் மற்றும் கௌரவத்திற்காக குரல் கொடுக்கும் உரிமை லீமாஸ் தலைவர் என்ற முறையிலும், மனிதவளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையிலும் தமக்கு உண்டு என்பதையும் பாப்பாராய்டு சுட்டிக் காட்டினார்.
தோட்டப் பாட்டாளிகள் தோட்ட மற்றும் மூலப்பொருள் உற்பத்தித் துறைகளுக்கு பங்களிக்கும் வெறும் தொழிலாளர்களாக மட்டும் விளங்கவில்லை. மாறாக, தலைமுறையின் உருவாக்கத்திற்கும் பெரு நிறுவனங்களின் வெற்றிக்கும் காலங் காலமாக தங்களை அர்ப்பணித்து வந்துள்ளனர். ஆகவே, தோட்டத் தொழிலாளர்களின் நலனை உறுதிச் செய்வதில் அரசாங்கம், முதலாளிகள் மற்றும் சமூகத்திற்கு தார்மீகப் பொறுப்பும் சமூக கடப்பாடும் உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு ஊராட்சி மன்றங்களும் திட்டமிடல் துறையும் மேம்பாட்டாளர்களின் நெருக்குதலுக்கு அடி பணியாமல் சமூகத்தின் தேவைகளைப் பொறுப்புணர்வுடனும் கவனத்துடனும் பரிசீலிக்க வேண்டும் என்று பாப்பாராய்டு தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.








